Friday 15 November 2019

குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பதைவிடக் கற்பனை கொடுங்கள்


குழந்தை இலக்கியத்திற்காக ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருதுபெறும் இந்தியப் படைப்பாளிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இங்கே ஒரே கூரையின்கீழ் இந்தியா அமர்ந்திருக்கிறது. சாகித்திய அகாடமி என்னும் தங்கச் சங்கிலியால்தான் இப்படி 23 மொழிகளையும் இழுத்துக் கட்ட முடியும். இந்தியாவின் நிலவியலையும் உளவியலையும் ஒன்றிணைத்த  சாகித்திய அகாடமிக்கு இந்தியப் பண்பாட்டுலகம் கடமைப்பட்டிருக்கிறது.
அஸ்ஸாம் மூங்கில் காடுகளுக்குள் வந்துபோகும் காற்றின் வல்லோசையை, ஹூக்ளி நதிக்கரையின் சுட்ட மீன் வாசத்தை, பஞ்சாபின் கோதுமை வயல்களில் பாடப்படும் அறுவடைப் பாடலை, தால் ஏரியில் துடுப்பு வலிக்கும் தாளத்தை, வடகிழக்கு இந்தியாவின் தேயிலை மணத்தை, மலையாளக் கரையின் சாரல் சரசத்தை நாங்கள் உற்று உணர்ந்ததைவிடக் கற்று உணர்ந்ததே அதிகம். அந்த அனுபவத்தை எங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சாகித்திய அகாடமிக்கு எங்கள் தலை வணக்கம்.
இந்தியா மதங்களால் இணைக்கப்படுவதைவிட மனங்களால் இணைக்கப்படுவதே சிறந்தது. மனங்களை இணைக்கும் ஒரே கலை இலக்கியம்; ஒரே களம் சாகித்திய அகாடமி.
சிறுவர் இலக்கியம்தான் ஒரு குழந்தையின் முதல் கல்வி. தாய்மொழியின் ஒலிதான் ஒரு குழந்தையின் முதல் சங்கீதம். சிறுவர் இலக்கியத்தில்தான் தொடங்குகிறது ஒரு தலைமுறையின் நேர்கோடு. குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பதைவிடக் கற்பனை கொடுங்கள். அந்தக் கற்பனையின் முதல் வித்து சிறுவர் இலக்கியம்தான்.
ஒரு குழந்தையைப் பார்த்து எத்தனை மதிப்பெண் பெற்றாய்? எத்தனை பரிசு வாங்கினாய்? எத்தனை மொழிகள் கற்கிறாய்? எதிர்காலத்தில் என்னவாக வருவாய்? என்று கேட்பவன் குழந்தைகள் மீது வன்முறை செய்கிறான். எத்தனை பட்டாம்பூச்சி பிடித்தாய்? எத்தனைமுறை வானவில் பார்த்தாய்? எத்தனை மழைத்துளிகளை உள்ளங்கையில் உருட்டினாய்? எத்தனை பெளர்ணமியோடு பந்து விளையாடினாய்? என்று கேட்பவன்தான் குழந்தையின் மூளையில் பூச்செடிகள் நடுகிறான்.
குழந்தைத் தொழிலாளர்களை மறந்துவிட்டு நாம் குழந்தைகள் தினம் கொண்டாட முடியாது. சிவகாசியின் வெடிமருந்துக் கிடங்குகளில், காஷ்மீரின் கம்பளத் தொழிற்சாலைகளில், மேற்கு வங்கத்தின் செங்கற் சூளைகளில், சூரத்தின் வைரத் தொழிற்சாலைகளில், டெல்லியின் டீக்கடைகளில், ஃபெரோஸாபாத்தின் வளையல் கூடங்களில், அலிகாரின் பூட்டுத் தொழிற்சாலைகளில் கருகிக் கிடக்கும் லட்சக்கணக்கான குழந்தைக் கொழுந்துகளை - அந்த இரும்படிக்கும் ரோஜாக்களை - மீட்டெடுக்காமல் குழந்தைகள் தினம் கொண்டாட முடியாது.
இந்தியாவின் எல்லாக் கல்விக்கூடங்களிலும் சிறுவர்களுக்கென்று தனி நூலகம் அமைத்துக்கொடுங்கள். கண் வழியாக மட்டுமல்ல காது வழியாகவும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். சீனாவைவிட இந்தியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகம். அதை ஏன் குழந்தை இலக்கியங்களுக்கும் நீட்டிக்கக் கூடாது?.

No comments:

Post a Comment